சத்யகாம ஜபலா- The Story of Satyakama Jabala

The Story of Satyakama Jabala

“டேய் வேசி மகனே, இதை எடுக்க ஒரு கை கொடு”, மாட்டு வண்டியில் ஒரு மூட்டையை ஏற்ற என்னை அழைத்தார் அந்த முதியவர். ஓடி சென்று அவருக்கு உதவினேன், ஒரு செப்பு நாணயத்தை என்னிடம் கொடுத்துவிட்டு வண்டியை நகர்த்தி சென்றார் அவர். அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கு ஓடினேன், அம்மாவிடம் அதை கொடுக்க, நீயே வைத்துக்கொள் என்றாள் எப்போதும் போல் புன்னகையோடு.

அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு சந்தைக்கு ஓடினேன், இன்றும் திருவிழா கோலம், சந்திரகுப்த மௌரியனின் போர் வெற்றிகளை பற்றிய நாடகம். எல்லோரும் ஆரவாரம் செய்து மகிழ்ந்துகொண்டிருக்கும் போது எனக்கு ஏனோ அந்த கொண்டாட்டங்கள் சலிப்பு தட்டின. இதே முகங்களை நாளை பார்த்தால் கோபமும், துக்கமும், பொறாமையும் நிறைந்திருக்கும்.

கூட்டத்தில் திடீர் அமைதி.. காவி உடை தரித்த நான்கு குருமார்கள் கூட்டத்தின் நடுவே சென்றனர், அங்கிருந்த மக்கள் அவர்களை வணங்க, அவர்களை நானும் உற்று நோக்கினேன். அதில் முதலில் சென்றவரின் முகத்தில் சலனமே இல்லாத ஒரு ஆனந்தம். கங்கையை நோக்கி அவர்கள் நடக்க, சற்று இடைவெளி விட்டு, நானும் பின்தொடர்ந்தேன். கங்கையின் அஸ்ஸி காட்டில் அவர்கள் நீராடி விட்டு படிக்கரையில் தியானம் செய்தனர். பின்னர் பரப்ரம்மத்தை பற்றி அவர் மற்ற மூவருக்கும் விளக்கிக்கொண்டிருந்தார்.

மிகவும் இருட்டி விட்டதால் நான் விடு திரும்பினேன், அம்மா “என்ன வாங்கி சாப்பிட்டாய்?”. நான் “ஒன்னும் இல்லை அம்மா” என்று அந்த நாணயத்தை அவளிடமே கொடுத்தேன்.

“சரி சாப்பிடலாம் வா” அவள். “எனக்கு பசிக்கவில்லை, எனக்கு பரப்பிரம்மம் என்றால் என்ன என்று சொல்லிக்கொடு”.

“எனக்கு தெரியாதடா, அதை பற்றி யார் பேசினார்களோ அவரிடமே போய் கேள்”.

என்னால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை. விடியற்காலை எழுந்துவிட்டேன் சந்தையில் நேற்று அவர் நடந்து சென்ற இடத்திற்கு சென்று காத்திருந்தேன். நேற்று அவர் அங்கு அந்தி சாயும் போது தான் வந்தார், இன்னும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமே, இப்போது என்ன செய்யலாம் என்று பார்க்கும் போது அங்கு சுயோகனும், அவனது நண்பர்களும் வந்தனர். என்னை பார்க்கும் போதெல்லாம் வம்பிழுப்பதும் அடிப்பதுமே அவனது பொழுதுபோக்கு. டேய் வேசி மகனே என்றும், என் தாயை பற்றி தகாத வார்த்தைகளால் திட்டியும், என்னை அடித்துவிட்டும் செல்வான். இன்றும் அவ்வாறே செய்தான்.

மனிதர்களை புரிந்து கொள்வது சிரமமாகவே இருந்தது. என் தாயிடம் விடைபெற்று செல்பவர்கள் எல்லோரும் சந்தோஷமாகவே சென்றனர். அவள் எனக்கு, உணவளித்து, உடையளித்து, தன் உயிரை விட மேலாக பாதுகாத்தாள். ஒருமுறை கூட என்னை கடிந்து பேசியதில்லை. அப்படிப்பட்டவளை தவறாகவும், எப்போதும் அடித்துக்கொண்டும், திட்டிக்கொண்டிருக்கும் முதலாளிகளை பணிவன்போடும் நடத்தும் மனிதர்களை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி, மனிதர்களை புரிந்து கொள்வதில் என்ன இருக்கிறது, நாம் அந்த பரபப்ரம்மத்தையே புரிந்து கொள்வோம், நம் குருவை தேடுவோம் என்று அலைந்தேன்.

அந்தி சாய்ந்தது. அந்த நால்வரும் வந்தனர். ஒரு கணம் கூட தாமதிக்காமல் அவரிடம் சென்று. “குருவே, , நான் ஒரு பிராமச்சாரி சீடனாக உங்கள் கீழ் வாழ விரும்புகிறேன். தயவுசெய்து என்னை உங்கள் மாணாக்கனாக ஏற்றுக் கொள்ளுங்கள்.” அவர் என்னை பார்த்து சிரிக்க, அவருடன் இருந்த மற்ற மூவரும் என்னிடம் “உன் பெயர் என்ன?, உன் குலம் மற்றும் கோத்திரம் என்ன?, உன் தந்தையின் பெயர் என்ன? அவரின் தொழில் என்ன? ” என்று படபடவென கேட்டனர். என் தாயிடம் இதே கேள்விகளை நான் கேட்டுள்ளேன், அவள் கூறிய பதிலை அப்படியே அவர்களிடம் நான் கூறினேன் “என் தாயிடம் பலர் வந்துள்ளதால், என் தந்தை யார் என்று எனக்கு தெரியாது, ஆக என் குலம் கோத்திரமும் தெரியாது”, ‘என் பெயர் சத்யகாம, என் தாயின் பெயர் ஜபலா, என்னை சத்யகாம ஜபலா என்று நீங்கள் அழைக்கலாம்”.

இதை கேட்ட அந்த மூவரில் ஒருவர் என்னை அடிக்கவே வந்து விட்டார். அவரை தடுத்த அந்த குரு,  “ஒருவன் தன் குணத்தாலும், செயலாலும் தான் பிராமணன் ஆகிறான்; பிராமணரல்லாதவர் யாராலும் உன்னைப்போல் சத்தியத்தை பேச முடியாது.” என் பெயர்  ஹரித்ருதாத்த கவுதமன், நாளை எனது ஆசிரமத்திற்கு வா, அங்கு வேள்வி தீயின் முன் உன்னை என் சீடனாக ஆக்க தீக்ஷை தருகிறேன்” என்றார்.

வேகமாக வீட்டிற்கு ஓடினேன், என் தாயிடம் நடந்தவற்றை கூறினேன். அவளும் ஆனந்த களிப்பில் என்னை வாரி அணைத்தாள். இதோ மீண்டும் விடிந்து விட்டது, கௌதமரின் ஆசிரமத்திற்கு சென்றேன். வேள்வி தீயின் முன் என்னை தன் சீடனாக ஏற்றுக்கொண்டார். சில நாட்கள் சென்றன எனக்கு தியான முறைகளையும் பயிற்றுவித்தார். ஒரு நாள் என்னை அழைத்து ஆசிரமத்தில் இருந்த நானூறு மெலிந்த மற்றும் பலவீனமான பசுக்களை வரிசைப்படுத்தி,  “சத்யகாமா, இந்த பசுக்களை காடுக்கு எடுத்துச் சென்று அவற்றைப் ஆரோக்கியமாக ஆக்கி கொண்டுவா” என்றார். நானும் அவரை வணங்கி  “குருவே, இந்த 400 பசுக்களை  ஆயிரம் ஆக்கிய பின்னரே திரும்பி வருவேன்”.

மாடுகளை மேய்ப்பதும் பராமரிப்பதும் ஒரு இனிய அனுபவம் மட்டும் அல்ல, ஆத்மார்த்தமாக செய்யும் போது அது பிரபஞ்ச சுழற்சியை உணர்த்தும் ஒரு ஆன்மீக பயிற்சியாகவே மாறுகிறது. என் முழு சக்தியையும் நான் மாடுகளை பராமரிப்பதிலேயே செலவிட்டேன், ஒவ்வொரு நாளும் சூரியன் மறையும் தருவாயில் தியானப்பயிற்சியும் மேற்கொண்டேன். நாட்கள், மாதங்கள் ஆயின பசுக்களின் எண்ணிக்கையும் பல்கிப்பெருகின. பசுக்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மாடுகளை குருவிடம் ஓட்டிச் செல்ல நினைக்கையில் ஒரு காளை மாடு, என் அருகில் நின்று என்னை உற்று நோக்கியது. அது என்னிடம் ஏதோ சொல்ல வருவது புரிந்தது. அங்கேயே நான் தியானத்தில் ஆழ ஆந்த காளை மாடு என்னிடம் “அன்பானவனே!  பரப்ரம்மத்தின் ஒரு பகுதியை உனக்கு நான் கற்றுத்தருகிறேன் என்றது. எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கும் பிரகாசமே ப்ரம்மத்தின் ஒரு பகுதி அந்த பிரகாசவாணனை நினைத்து தியானம் செய் என்றது. எனது ஆழ்ந்த தியானத்தில் நானே பிரகாசமயமாக மாறியதை உணர்ந்தேன். அந்த காளை

மாடு, நாளை அக்கினியின் முன் தியானம் செய், அது உனக்கு ப்ரம்மத்தின் இன்னொரு பகுதியை பற்றி கற்றுக்கொடுக்கும் என்றது. அடுத்தநாள் விடியற்காலையில் குருவின் ஆசிரமத்தை நோக்கி பசுக்களை ஓட்டிச் சென்றேன், இன்னும் ஆசிரமத்தை சென்றடைய 3 நாட்கள் ஆகும். மாலை, மலையடிவாரத்தில் சிறு தீ மூட்டி, அந்த அக்னியை நோக்கி தியானித்தேன். தியானத்தின் ஆழத்தில் அந்த அக்னி என்னிடம் பேசக்கேட்டேன்   “சத்யகாமா! நான் உனக்கு பிரம்மத்தின் ஒரு பகுதியை கற்பிக்கிறேன். பிரம்மம் ஆதியோ அந்தமோ இல்லாதது, அந்த முடிவற்றதை நோக்கி தியானி, அவ்வாறு செய்பவன் முடிவற்றவனாகிறான்.” என்றது. நானும் அந்த முடிவற்ற பிரம்மத்தை நோக்கி தியானித்தேன். அடுத்தநாள் தியானிக்கும் போது, ஒரு அன்னப்பறவை என்னிடம் பேசியது பிரம்மத்தின் இன்னொரு உரு  ‘ஜியோதிஷ்மன்’ அதுவே சூரியனின் உருவாக இருப்பது என்றது.  அடுத்தநாள் ஒரு நீர்ப்பறவை நான் தியானிக்கும் போது என் மனதில் தோன்றி பிரம்மனின் கடைசி பாகத்தை உனக்கு நான் கூறுகிறேன் என்றது. பிரம்மம் தான் ‘ஆயதனவான்’ – உயிர்களின் இயக்கத்தின் மூலம், இதை உணர்ந்தால் பிரம்மத்தை உன்னுள் உணரமுடியும்” என்றது. என்னுள் ஒரு அமைதி. நான் பசுக்களை ஓட்டிக்கொண்டு குருவின் ஆசிரமத்தை அடைந்தேன்.  குரு என்னை பார்த்து “சத்தியகாமா, உன் முகம் பிரம்ம ஞானம் பெற்று பிரகாசிக்கிறது, உனக்கு கற்று கொடுப்பதற்கு இனி ஒன்றும் இல்லை” என்றார். நான் அவரை நமஸ்கரித்தது, “ஐயா, ஒரு குருவிடம் நேரடியாகவே பெற்ற அறிவு தான் சத்தியம், தாங்களே எனக்கு பிரம்மஞானத்தை எனக்கு கற்பியுங்கள்” என்றேன். அவரும் எனக்கு கற்பித்து “இந்த காலம் உள்ளவரை உன் பெயரும் உன் தாயின் பெயரும் நிலைத்திருக்கும்” என்று வாழ்த்தினார்.

நான் பெற்ற ஞானத்தை தேடல் மிக்கவர்களுக்கு கற்றுக்கொடுத்தேன்.. என்னை பற்றி இன்னும் தெரிய வேண்டும் என்றால் சந்தோக்யா உபநிஷத்தில் நான்காம் அத்யாயத்தை படிக்கலாம். நான் கூறியவற்றை படிக்க ஜபலா உபநிஷத் என்ற உபநிஷத்தை படிக்கலாம். என் மாணவன் உபகோஸல கமலாயனா நான் கற்பித்தவற்றை பலருக்கு கற்றுக்கொடுக்க ஒரு பள்ளி துவங்கினார், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஆன்மீகத்தை கற்றுக்கொடுக்கும் இடமாக அந்த ஜபலா பள்ளி அமைந்தது. எந்த பெண்ணை வேசி என்று இந்த உலகம் தூற்றியதோ அதே உலகம், அவள் பெயரில் உள்ள உபநிஷத்தை போற்றி பாடியது. அவளும் பிரம்மமே, நீங்களும் பிரம்மமே “அகம் பிரம்ஹாஸ்மி” இதை உணர்ந்தவருக்கு உயிர்களில் ஏற்றத்தாழ்வில்லை  #ஆன்மிகம்